உள்ளூர் செய்திகள்

குன்னூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

Published On 2023-10-11 14:31 IST   |   Update On 2023-10-11 14:31:00 IST
  • மாவட்ட அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை பரிந்துரைகளை வழங்கினர்
  • முதல்வர் மருத்துவ திட்டத்தின்கீழ் 27 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டை

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, குன்னூர் வட்டார வளமையம், மாவட்ட மாற்றுத் திறனாளி நலதுறை உள்ளடங்கிய கல்வி திட்டத்தின்கீழ் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம், குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட கல்வி அதிகாரி நந்தகுமார் தலைமைதாங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் கணேஷ், விஜயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, யசோதா, அறிஞர் அண்ணா பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

முகாமில் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு உபகரணங்கள், அறுவை சிகிச்சைக்கான பரிந்துரைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் குன்னூர் வட்டாரத்திற்குட்பட்ட 115 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேலும் 20 பேருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் மூலம் தேசிய அடையாள அட்டை, வழங்கினர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 27 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டை வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

குன்னூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர், இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், மைய பராமரிப்பாளர்கள், கணக்காளர்கள், கணிணிவிவர பதிவாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாணவர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி மற்றும் பயணப்படி வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆடம்பர ஓட்டல் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News