கோவில் அர்ச்சகர்கள்-பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
- 100 நாள் திட்ட தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது.
- எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் :
கோவில் பூசாரிகள் நல சங்க மாநிலத் தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள், குறைந்த வருவாய் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர்.100 நாள் திட்ட தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் கோவில் பூசாரிகள், அர்ச்சகர் நிலை இதைவிட மோசமாக உள்ளது.
ஒரு சில கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு, மாத ஊதியம் இன்றி ஊக்கத்தொகை என்ற பெயரில் தினசரி 33 ரூபாய் வழங்கப்படுகிறது.
நீண்ட நாள் கோரிக்கைக்கு பின் ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் வேலை பார்க்கும் பூசாரிகளுக்கு 1,000 ரூபாய் மாத ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது. அவர்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊதியம் குறைவாக பெற்று வரும் அர்ச்சகர், பூசாரிகளுக்கு அறநிலையத்துறையே இ.பி.எப்., சந்தா தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.