மீஞ்சூர் அருகே மரக்கடையில் மின்கசிவால் தீ விபத்து - ரூ.4 கோடி மதிப்பிலான பொருள் எரிந்து நாசம்
- மரக்கடையின் முதல் தளத்தில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது.
- உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் முழுவதும் தீப்பிடித்தது.
பொன்னேரி:
மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலை மீஞ்சூர் செல்வ மஹால் அருகில் அமைந்துள்ள பிளைவுட் மரக்கடையின் முதல் தளத்தில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது.
தீயானது மெதுவாக கீழே உள்ள மரக்கடைக்குப் பரவியது. உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் முழுவதுமாக தீப்பிடித்தது.
தகவலறிந்து அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலைய தீயணைப்பு வாகனம், வல்லூர், பொன்னேரி, எண்ணூர், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட 5 தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பொன்னேரி-திருவொற்றியூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீ விபத்தில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில் மரங்கள் எரிந்து நாசமாயின.
பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், தாசில்தார் செல்வகுமார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.