தமிழ்நாடு செய்திகள்

மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தத்திற்குள் செல்லாத 11 பஸ்களுக்கு அபராதம்

Published On 2025-01-25 12:10 IST   |   Update On 2025-01-25 12:11:00 IST
  • பெரிய அளவிலான பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது.
  • சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், நீதி மன்றங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட்டு வருவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிறுத்தம் என்பதால் கடலூரில் இருந்து புதுச்சேரி, பண்ருட்டி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்களும் நின்று பயணிகள் ஏற்றி செல்லும் வகையில் பெரிய அளவிலான பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இங்கிருந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி சென்று வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் சரியான முறையில் பஸ் நிறுத்தத்துக்குள் நிறுத்தாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்திற்குள் நிறுத்தாமல் சென்ற 11 பஸ்கள் தெரிய வந்தது. இதன் காரணமாக போலீசார் 11 பஸ்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்து டிரைவர்களுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பினர். மேலும் பஸ் நிறுத்தத்திற்குள் பஸ்களை நிறுத்தாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

Tags:    

Similar News