உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நவீன சலவையகங்கள் அமைக்க நிதியுதவி- கலெக்டர் தகவல்

Published On 2022-09-25 10:22 GMT   |   Update On 2022-09-25 10:22 GMT
  • தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நவீன சலவையகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன்படி நவீன சலவையகங்கள் ஏற்படுத்த சலவைத் தொழில் தெரிந்த 10 நபர்களைக் கொண்ட குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.

இந்த குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள இத்தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மக்கள் ஒரு குழுவாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News