உள்ளூர் செய்திகள்

விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டுள்ள பேரிக்காய்கள்


கொடைக்கானலில் பேரிக்காய்க்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-06-08 10:39 IST   |   Update On 2022-06-08 10:39:00 IST
  • கொடைக்கானலில் விளையும் பழவகைகளில் பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் மிக முக்கியமானதாகும்.
  • தற்போது பேரிக்காய் சீசன் கொடைக்கானலில் தொடங்கியுள்ளது.

கொடைக்கானல் :

கொடைக்கானலில் விளையும் பழவகைகளில் பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் மிக முக்கியமானதாகும். பேரிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை உடையது.

அதிக இரும்புச்சத்து உள்ளது. வயிற்றுக் கோளாறுக்கு சிறந்தது. ஜீரண சக்தி மிகுந்தது. இவ்வகை பேரிக்காய் வெளிமாநிலங்களில் குறிப்பாக கேரள மாநிலத்தில் அதிக அளவில் விற்பனையாகும். தற்போது பேரிக்காய் சீசன் கொடைக்கானலில் தொடங்கியுள்ளது.

அட்டுவம்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, பிரகாசபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பேரிக்காய் மகசூல் தற்போது தொடங்கியுள்ளது. பேரிக்காய் மகசூல் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் குறைவான அளவே மகசூல் செய்யப்பட்டு வருவதால் ஒரு கிலோ பேரிக்காய் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

விளைச்சல் குறைவாகத் தொடங்கியுள்ள நிலையில் அதிக விலை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகசூல் படிப்படியாக அதிகரித்து இன்னும் 30 முதல் 40 நாட்கள் வரை தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். அதிக அளவில் மகசூல் கிடைக்கும் நிலையில் விலை குறையும் என்றும் விவசாயிகள் கூறினர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பேரிக்காய் மகசூல் குறைவாகவே உள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். பேரிக்காய் விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொடைக்கானலில் பேரிக்காய் பழக்கூழ் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்களை அமைக்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News