பிளஸ்-2 படித்து விட்டு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற தினந்தோறும் பழவேற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் வந்தனர்.
- ராஜேந்திரன் மருத்துவம் படிக்காமல் ஆஸ்பத்திரி நடத்தி சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவ ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது.
பொன்னேரி:
மீஞ்சூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது65). இவர் பழவேற்காடு கோட்டைத் தெருவில் பாபுராஜ் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். மருத்துவ சிகிச்சைக்கு அவர் குறைந்த கட்டணம் வசூலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் அவரது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற தினந்தோறும் பழவேற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் வந்தனர்.
இந்த நிலையில் ராஜேந்திரன் மருத்துவம் படிக்காமல் ஆஸ்பத்திரி நடத்தி சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவ ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவ அதிகாரிகள் ராஜேந்திரனின் ஆஸ்பத்திரிக்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. சில ஆண்டுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணி செய்தபோது ஏற்பட்ட அனுபவத்தை வைத்து அவர் தனியாக ஆஸ்பத்திரி தொடங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ராஜேந்திரனை கைது செய்தனர்.