உள்ளூர் செய்திகள்

கோவையில் 848 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

Published On 2023-08-23 09:31 GMT   |   Update On 2023-08-23 09:31 GMT
  • காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்தார்.
  • இத்திட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

கோவை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்தார்.

கடந்த மே 7, 2022 அன்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, முதல்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும், 1545 அரசு பள்ளிகளில் பயிலும் 114095 தொடக்கப் பள்ளி (1முதல் 5-ம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023ஆம் ஆண்டில் முதற் கட்டமாக செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இத்திட்டம், கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சியில் 121 பள்ளிகள், மதுக்கரை நகராட்சியில் 4 பள்ளிகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 11 பள்ளிகள் என மொத்தம் 136 பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், 17671 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர்.

இத்திட்டம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என கடந்த சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, இத்திட்டம், கோவை மாவட்டத்தில், கூடலூர் நகராட்சி, காரமடை நகராட்சி, கருமத்தம்பட்டி நகராட்சி, பொள்ளாச்சி நகராட்சி, வால்பாறை நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன் பாளையம், சர்க்கார் சாமக்குளம், அன்னூர், சூலூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, சுல்தான் பேட்டை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு), ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள 848 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 43797 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர். இத்திட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

Tags:    

Similar News