மது அருந்திய இருசக்கர வாகன மெக்கானிக் சாவு
- அளவுக்கு அதிகமாக மது அருந்திய இருசக்கர வாகன மெக்கானிக் உயிரிழந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு காமாட்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(38). இவர், ஈரோடு தெப்பக்குளம் வீதியில் சொந்தமாக டூவீலர் ஓர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு பானுபிரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தமிழ்செல்வன் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். கடந்த 31ம் தேதி தமிழ்செல்வனுக்கும், பானுபிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், பானுபிரியா கோபித்து கொண்டு அருகில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி தமிழ்செல்வன் அதிக மதுபோதையில் வீட்டின் மாடியில் தூங்க சென்றார். சிறிது நேரம் கழித்து தமிழ்செல்வனின் அண்ணன் சென்று பார்த்தபோது, தமிழ்செல்வன் எவ்வித அசைவும் இன்றி மயங்கி கிடப்பதை பார்த்தார். இதையடுத்து தமிழ்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு தமிழ்செல்வன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பானுபிரியா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.