உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

Published On 2023-08-19 10:11 GMT   |   Update On 2023-08-19 10:11 GMT
  • விசேஷ நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
  • பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி, கோழி கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளையும் பூக்கள் விவசாயிகளால் நடத்தப் படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்த சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக விசேஷ நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்பங்கி பூ ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற நிலையில் நேற்று இரு மடங்கு உயர்ந்து ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனையானது.

இதேபோல் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.600-க்கும், முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.250-க்கும், கோழி கொண்டை ஒரு கிலோ ரூ.130-க்கும், செண்டு மல்லி ஒரு கிலோ ரூ.92-க்கும் விற்பனையானது.

சம்பங்கி பூக்கள் இரு மடங்கு விலை உயர்ந்தாலும், மற்ற பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்ததால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News