உள்ளூர் செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி

Published On 2023-03-02 11:27 IST   |   Update On 2023-03-02 20:41:00 IST
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
  • வாக்கு எண்ணிக்கையின் துவக்கம் முதலே இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது. இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் பின்தங்கினர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்.

2023-03-02 15:11 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடைத்தேர்தல் களத்தைத் தனது இழிவான அரசியலுக்குப் பயன்படுத்தியது அ.தி.மு.க. பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போல பழனிசாமி நினைத்தார். அவரது ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்பதை மீண்டும் ஒரு முறை அவருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், கழக முன்னணியினர், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி! இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2023-03-02 13:34 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகத்தின்மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். ஈரோடு கிழக்கு பார்முலா என ஒன்றை உருவாக்கு ஜனநாயக படுகொலையை அரங்கேற்றி உள்ளது திமுக.

அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

2023-03-02 13:29 GMT

இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியானது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. என்னை வெற்றி பெற வைத்த ஈரோடு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

2023-03-02 12:37 GMT

இறுதிச் சுற்று முடிவு: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10804 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

2023-03-02 12:36 GMT

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார்

2023-03-02 12:08 GMT

14-வது சுற்று முடிவு: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,04,907 வாக்குகள் பெற்று வெற்றியை நெருங்கினார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 41,666 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 7,984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 1,115 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

2023-03-02 12:05 GMT

இளங்கோவன் பெற்ற வாக்குகள் ஒரு லட்சத்தை தாண்டியது. 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் முன்னிலை பெற்றார்.

2023-03-02 11:48 GMT

13-வது சுற்று முடிவு: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 97,729 வாக்குகள் பெற்று வெற்றியை நெருங்கினார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 38,790 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 6,357 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 950 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

2023-03-02 11:22 GMT

12-வது சுற்று முடிவு: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91, 066 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 6,357 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 836 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனிடையே இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

2023-03-02 10:05 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags:    

Similar News