உள்ளூர் செய்திகள்

இன்று முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நெல்லை-செங்கோட்டை வழித்தடத்தில் மின்சார என்ஜின் இயக்கம் திடீர் ரத்து

Published On 2023-06-17 09:21 GMT   |   Update On 2023-06-17 09:21 GMT
  • நெல்லை-செங்கோட்டை இடையே நேற்று முன்தினம் அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
  • இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை- செங்கோட்டை இடையே ரெயில் பாதையில் தண்டவாளங்கள் வலுப்ப டுத்தப்பட்டு மின்பாதை அமைக்கப்பட்டது.

அதில் மின்சார ரெயில் என்ஜின் மூலம் அதிவேகமாக ரெயில்கள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நெல்லை-செங்கோட்டை இடையே மின்சார என்ஜின் மூலம் ரெயில் இயக்குவதற்காக நேற்று முன்தினம் அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் எவ்வித குறைபாடுகளும் இன்றி ரெயில் இயங்கியதால், இன்று முதல் அந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில் அந்த வழித்தடத்தில் நெல்லையில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயில் (06681-06658) வழக்கம்போல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் தென்மலை, ஆரியங்காவு பகுதிகளில் இன்னும் மின்மயமாக்கல் பணிகள் முடிவடையாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, மதியம் 1.50 மணி, மாலை 6.15 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு காலை 6.40 மணி, காலை 10.05 மணி, மாலை 5.50 மணிக்கும் இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட இருந்த நிலையில் இன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்பட்டது.

வழக்கம்போல் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட நிலையிலேயே ரெயில் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து அதி காரிகளிடம் கேட்டபோது அவர்களுக்கும் இந்த திடீர் ரத்து குறித்த தகவல் தெரியவில்லை. ஓடுபாதையில் தேவையான அளவு மின்சாரம் வினியோகம் இல்லையா அல்லது மின்சார என்ஜின் இல்லையா என்பது குறித்து அவர்களுக்கும் முழு விபரம் தெரியவில்லை. இதனால் எந்த விதமான முன்னறிவிப்பும், காரணமும் இல்லாமல் மின்சார என்ஜின் ரெயில் இயக்கம் ரத்தானது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

Similar News