உள்ளூர் செய்திகள்

சாலையில் நடந்து சென்ற மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

Published On 2022-07-06 10:01 GMT   |   Update On 2022-07-06 10:01 GMT
  • ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருமுனையில், ப்ளூ பைக்ஸ் சந்திப்பில் உயர் மின்னழுத்தத்தின் மின்சார பெட்டி உள்ளது.
  • சாலையில் வெளியே தெரியும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.

ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருமுனையில், ப்ளூ பைக்ஸ் சந்திப்பில் உயர் மின்னழுத்தத்தின் மின்சார பெட்டி உள்ளது. இதன் அருகே எதிரெதிர் இரண்டு டாஸ்மாக் பார் உள்பட வணிக வளாகங்களும் உள்ளது. அதனால் இந்த இடம் பகல் நேரம் அல்லாமல் இரவு நேரத்திலும் அதிக கூட்ட நெரிசலாக காணப்படும். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் இந்த உயர் மின்னழுத்தம் மின்சார பெட்டி அருகே மாடு ஒன்று நடந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைப் பார்த்த டாஸ்மாக் பாருக்கு வந்தவர்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடினர். உடனடியாக மின்சார ஊழியர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்து மாட்டை சாலையில் போட்டு விட்டு சென்றனர். சுமார் மூன்று மணி நேரம் சாலையில் கிடந்த மாட்டை துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.

மழையின் காரணமாக சாலையில் நடந்து சென்ற மாடு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. சாலையில் வெளியே தெரியும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News