உள்ளூர் செய்திகள்

துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

பரமத்தி வேலூரில் துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி

Published On 2022-08-03 08:11 GMT   |   Update On 2022-08-03 08:11 GMT
  • பரமத்தி வேலூரில் ஓவ்வொரு வருடமும் ஆடி மாதம் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
  • இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலையை கலைஞர்கள் வடிவமைத்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஓவ்வொரு வருடமும் ஆடி மாதம் 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி கடந்த ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கியது.

நிகழ்ச்சியில் மகாபாரத கதையில் வரும் பாண்டவர்கள், கவுரவர்கள் போன்று அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கதை பாடும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

ஆடி 18-ம் நாளான இன்று துரியோதனனை பீமன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலையை கலைஞர்கள் வடிவமைத்தனர். துரியோதனனை பீமன் வதம் செய்து அதில் இருந்து வரும் ரத்தத்தை எடுத்து திரவுபதி தனது கூந்தலில் தடவிய பின்னர் கூந்தலை முடிந்து கொள்ளுவதோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

போரில் வெற்றி பெற்ற கலைஞர்கள் போருக்கு பயன்படுத்திய ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்று காவிரி ஆற்றில் சுத்தம் செய்து காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் மகாபாரத கதை பாடும் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றுக்கு செல்ல காவல் துறையினர் மற்றும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் தடைவிதித்துள்ளதால் மகாபாரத கதைபாடும்‌‌ குழுவினர் காவிரி ஆற்றுக்கு சென்று ஆயுதங்களை சுத்தம் செய்ய முடியாத‌ நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News