ஆழ்துளை கிணற்றின் மீது கழிவுநீர் கால்வாய் அமைப்பு
- குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த அந்த ஆழ்துளை கிணறு மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
- மின்மோட்டார் அமைக்கப்பட்டு அதன் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கீழ்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பானூர் கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 14-வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்வாய் அக்கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த அந்த ஆழ்துளை கிணறு மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
இது அப்பகுதி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக ஆழ்துளை கிணறு மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட ஒப்பந்ததார் மீது நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணற்றை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கிராம இளைஞர் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக கை பம்பு அமைக்கப்பட்டு அதன் மூலம் கிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.
தற்போது மின்மோட்டார் அமைக்கப்பட்டு அதன் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் ஆழ்துளை கிணறு மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதுகுறித்து கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது, கிராம மக்களின் குடிநீர் தேவை தென்பெண்ணை ஆற்றிலிருந்து கிடைப்பதால், ஆழ்துளை கிணறு பயனற்று கிடந்தது. தற்போது இந்த ஆழ்துளை கிணறு செயல்பாட்டில் இல்லை என தெரிவித்தார்.