பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய காட்சி.
ஊருக்குள் நின்று செல்லாததனியார் பேருந்து சிறைபிடிப்பு
- தனியார் பேருந்துகள் பல, பெரும்பாலும் பல்லக்காபாளையம் ஊருக்குள் செல்லாமல், சேலம் கோவை புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது.
- இதனால் இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பல முக்கிய வேலையாக செல்லும் பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கிராமம் உள்ளது. குமாரபாளையம் நகரில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்துகள் பல, பெரும்பாலும் பல்லக்காபாளையம் ஊருக்குள் செல்லாமல், சேலம் கோவை புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது.
இதனால் இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பல முக்கிய வேலையாக செல்லும் பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பகலில் சேலம் செல்வதற்காக பவானியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பல்லக்காபாளையம் புறவழிச்சாலை வழியாக சேலம் சென்றது. உடனே பொதுமக்கள் சாலையின் குறுக்கே நின்று, பேருந்தை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.
நடத்துனர், ஓட்டுனரிடம் இது குறித்து வாக்குவாதம் செய்து முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தவழியாக போக்கு வரத்து பாதித்தது. சாலையில் செல்ல முடியாமல் பல வாகனங்கள் வரிசையாக நின்றன.
இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார், மறியல் நடந்த பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இனி பேருந்து ஊருக்குள் வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் பேருந்தை விடுவித்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.