தீபாவளி பண்டு மோசடி- சீட்டு நடத்தியவரின் தாயை சிறைப்பிடித்து பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்
- 12,000 நபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் ஏஜெண்டுகள் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளது
- இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் ஊராட்சியில் வசித்து வந்தவர் ஜோதி (வயது36) ஆவார். இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் திருமண சீர்வரிசை பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில், மாதந்தோறும் பணம் செலுத்தினால் தீபாவளிக்கு இரண்டு கிராம் தங்கம், 4 கிராம் தங்கம், ஸ்வீட், பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் கொடுப்பதாக சுமார் 12,000 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் ஏஜெண்டுகள் மூலம் வசூல் செய்தாராம். ஆனால், குறித்த நேரத்தில் யாருக்கும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை தரவில்லையாம்.
எனவே, பணம் கட்டியவர்கள் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஜோதி தலைமறைவானார். இதன் பின்னர்,போலீசார் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த ஜோதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த வாரம் ஜோதி ஜாமீனில் வெளியில் வந்தாராம்.
இந்நிலையில், இன்று இரவு ஜோதியின் தாய் ஜெகதாம்பாள்(வயது60) தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலைக்கு வந்திருந்தார்.இதனை அறிந்த பணம் கட்டி ஏமாந்தவர்களில் சிலர் மூதாட்டி ஜெகதாம்பாளை சிறைப்பிடித்து ஜோதியை உடனடியாக சம்பவ இடத்துக்கு வருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஜோதி உடனடியாக இங்கே வரவேண்டும் தங்களுக்கு பணத்தை தர வேண்டும் என்று கூறி பணம் கட்டியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்தால் இப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.