உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் 7 தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்

Published On 2022-06-25 09:29 GMT   |   Update On 2022-06-25 09:29 GMT
  • தனியார் பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
  • குழந்தைகள் ஏறும் வகையில் படிக்கட்டுகளின் உயரம் உள்பட 21 வகையான அரசு விதிமுறைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

ஊட்டி:

வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்னர், மே மாதம் பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யப்படும். இந்த முறை கொரோனா பரவல் காரணமாக பள்ளி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தள்ளிப்போனதால் ஆய்வு பணிகள் தாமதமாக தொடங்குகின்றன.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதற்காக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது.

தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தார். வாகனங்களில் பள்ளிக்கூடத்தின் பெயர், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி முதலுதவி பெட்டிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, குழந்தைகள் ஏறும் வகையில் படிக்கட்டுகளின் உயரம் உள்பட 21 வகையான அரசு விதிமுறைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:- தமிழ்நாடு மோட்டார் வாகன பள்ளி பஸ்கள் முறைப்படுத்துதல் மற்றும் சிறப்பு விதிகள் 2012-ன் படி ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன. இதன்படி நீலகிரியில் ஊட்டி, கூடலூர் ஆகிய வட்டார போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த 345 பள்ளி வாகனங்களில் முதற்கட்டமாக 164 பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நீலகிரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஜெகதீசன் உத்தரவின் பேரில் ஊட்டி நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் தீயணைப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அப்போது சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேடு களும் வழங்கப்பட்டன. கூடலூரில் 90 வாகனங்களும் மீதமுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களும் ஒரிரு நாளில் ஆய்வு செய்யப்படும். இதேபோல் நேற்று நடந்த ஆய்வில் ஒரு சில குறைபாடுகள் இருந்த 7 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், வாகன ஆய்வாளர் விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அர்ஜூனன் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News