யானையால் நாசமடைந்த வாழை தோட்டத்தை மாவட்ட உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ ஆகியோர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
கொளத்தூர் அருகே யானையால் சேதப்படுத்தப்பட்டவிவசாய நிலங்களில் சதாசிவம் எம்.எல்.ஏ., வன அதிகாரி ஆய்வு
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்ன தண்டா கிராமத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒற்றை ஆண் யானை சுற்றித் திரிந்தது. இரவு நேரத்தில் கிராமத்திற்குள் நுழையும் ஒற்றை யானை, அங்குள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் மேட்டூர் வனச்சரக அலுவலர் சிவானந்தம் தலைமையில் பாரஸ்டர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் வந்து, பொதுமக்களுடன் இணைந்து அந்த யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.
இதனிடையே, யானை வாழை தோட்டத்தை சேதம் செய்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
எம்.எல்.ஏ ஆய்வு
இந்த நிலையில் சேலம் மாவட்ட உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் மற்றும் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ ஆகியோர் சின்னத் தண்டா கிராமத்திற்கு சென்று யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் கிராம மக்க ளிடம், வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
சீர்குலைந்த சாலை
மேட்டூர் அருகே உள்ள கோனூர் கிராமத்திற்கு உட்பட்ட வீரனூர் - கூலையூர் சாலை வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. சீர்குலைந்துள்ள அந்த சாலையை புதுப்பிக்க வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் கொளத்தூரை அடுத்த காரைக்காடு கிராமம் ஒட்டி அமைந்துள்ள சின்ன காளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக வும் மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காகவும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. ஏற்கனவே வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் மேட்டூர் வந்த மாவட்ட உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், கோனூர் கிராமம் மற்றும் காரைக்காடு பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். இது குறித்து மாவட்ட வன பாதுகாவ லரிடம் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
ஆய்வின்போது மேட்டூர் வன சரக அலுவலர் சிவானந்தம், பாரஸ்டர் வெங்கடேஷ், பா.ம.க மாவட்ட செயலாளர் ராஜசேகரன், கொளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் மாரியப்பன், மேச்சேரி ஒன்றிய பா.ம.க செயலாளர் சுதாகரன் மற்றும் பலர் உடன் சென்றனர்.
பாலாறு பகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு
தமிழக கர்நாடக எல்லை பகுதியான பாலாறு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களிடம், கிலோ ஒன்றுக்கு ரூ. 3 வரை கர்நாடக வனத்துறையினர் வசூல் செய்வதாக, தமிழக மீனவர்கள் சதாசிவம் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சதாசிவம் எம்.எல்.ஏ, வரு வாய் துறையினர் மற்றும் வனத்துறையினருடன் பாலாறு பகுதிக்கு சென்று அங்குள்ள கர்நாடக வனத்துறையினரிடம், தமிழக மீனவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.