உள்ளூர் செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

தொடர் அட்டகாசத்தால் வாழைப் பயிர்கள் சேதம்: 'காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்' - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2023-01-08 13:48 IST   |   Update On 2023-01-08 13:48:00 IST
  • நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வாழை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
  • தமிழகத்திலும் காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி, அவை விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருவதை கட்டுப்படுத்தி, எங்களின் வாழ்வா தாரத்தைக் காக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வாழை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்ததாக நெல் மற்றும் கிழங்கு வகைகளை விவசாயிகள் அதிகமாக பயிர் செய்கிறார்கள்.

களக்காடு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், இங்குள்ள விவசாயிகள் வனவிலங்குகளின் தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது.

குறிப்பாக, காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் காலம் காலமாக இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மலையில் இருந்து அடிவாரப் பகுதிக்கு வரும் காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில், விவசா யிகளின் வாழை மற்றும் கிழங்கு பயிர் செய்துள்ள தோட்டங்களுக்குள் பெரும் கூட்டங்களாகப் புகுந்து, மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன.

வாழைப் பயிர்களின் அடிப்பகுதியைக் கடித்துக்குதறி, அதன் கிழங்கை சாப்பிடுகின்றன.

சர்க்கரைவள்ளி கிழங்குகளையும் இவ்வாறே சாப்பிடுகின்றன. தென்னங்கன்றுகளையும் இந்தக் காட்டுப் பன்றிகள் விட்டு வைப்பதில்லை.

தற்போது இந்தக் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை நேரில் சந்தித்த களக்காடு பகுதி விவசாயிகள், கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்த னர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் வங்கிகளில் கடன் பெற்றுதான் விவசாயம் செய்து வருகிறோம். வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில்தான் விவசாயத் தொழில் உள்ளது. இந்த நிலையில், தற்போது காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக எங்களது வாழைத்தோட்டங்கள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்தக் காட்டுப் பன்றிகள் தமிழக அரசின் வன விலங்குகள் பட்டியலில் இருப்பதால், அவற்றைத் தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், எங்களால் அவற்றை ஒன்றும் செய்ய முடியவில்லை.

காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தி விவசாயி களை காக்க, கேரள அரசு, இந்தக் காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது.

அதேபோல், தமிழகத்திலும் காட்டுப் பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி, அவை விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருவதை கட்டுப்படுத்தி, எங்களின் வாழ்வா தாரத்தைக் காக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஏற்கனவே நாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கும் நிலையில், காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் இனியும் தொடர்ந்தால், எங்களால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது

மனுவைப் பெற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இதுகுறித்து சட்டமன்றத்தில் உடனடியாகப் பேசுவதோடு, முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News