உள்ளூர் செய்திகள்

 சங்கர் ஜிவால்       சைப்ர் கிரைம் குற்றவாளி

மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகள்

Published On 2022-07-01 16:13 GMT   |   Update On 2022-07-01 16:13 GMT
  • கவனமுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தகவல்
  • மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சமீப காலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

அதன்படி பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாத பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு மொபைல் எண்ணையும் சேர்த்து எஸ்.எம்.எஸ். ஆக அனுப்புவர்.

இதனை நம்பி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம், வங்கி கணக்கு விவரங்களை பெற்று அவர்களது அக்கவுண்டிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பர். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த மொபைல் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம்.

மின்வாரியத்திலிருந்து இது போன்ற மெசேஜ்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே கவனமுடன் இருக்குமாறு பொதுமக்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News