நாமக்கல்லில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
- நாமக்கல் நகருக்கு 1000-க்கும் மேற்பட்ட பஸ்கள்
- இட வசதி இல்லாததால் நாமக்கல் பஸ் நிலையத்தில் கடும் நெருக்கடி
நாமக்கல்:
நாமக்கல் நகரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது நாமக்கல் நகருக்கு 1000-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கிறது. போதுமான இட வசதி இல்லாததால் நாமக்கல் பஸ் நிலையத்தில் கடும் நெருக்கடி நிலவி வருகிறது. இதை அடுத்து பொதுமக்களின் வசதிக்காக, நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகளை கடந்த மாதம் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
12 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணி தொடங்கப்பட்டு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் புதிய பஸ் நிலைய பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 60 பஸ்கள் நிறுத்தும் அளவுக்கு பஸ் நிலையம் அமைகிறது. கார் பார்க்கிங், மோட்டார் சைக்கிள் பார்க்கிங் தனித்தனியாக அமைக்கப்படுகிறது. 3 இடங்களில் பொதுக் கழிப்பிடமும், மாற்று திறனாளிகளுக்கு தனியாக கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் 57 கடைகள், 2 ரெஸ்டாரண்டுகள் அமைக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் பைபாஸ் சாலை செல்கிறது. இதனால் 190 மீட்டர் தூரத்தில் ரிங் ரோடு அமைக்கப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு வசதியான இடத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதால் முதலைப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள இடங்களில் பலர் போட்டி போட்டு நிலத்தை வாங்கி வருகிறார்கள். அந்த பகுதி விரைவில் வளர்ச்சி அடையும் என்பதால் நாமக்கல் நகரம் மேலும் விரிவடையும். இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.