உள்ளூர் செய்திகள்

அரசுப் பேருந்தில் ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: கண்டக்டர் கைது

Published On 2025-04-16 12:26 IST   |   Update On 2025-04-16 12:26:00 IST
  • இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

நெல்லை:

கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பயணம் செய்தார்.

அந்த இளம்பெண் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக கோவையை சேர்ந்த மகாலிங்கம் (வயது 43) என்பவர் பணியில் இருந்தார்.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அந்த ஐ.டி. நிறுவன பெண்ணுக்கு பஸ் கண்டக்டர் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், செல்போனில் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் உறவினர்களுடன் புறப்பட்டு நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. உடனே இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து அங்கு புறக்காவல் நிலைய பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அதில் கண்டக்டர் மகாலிங்கம் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மகாலிங்கத்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு அரசு பஸ் கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News