உள்ளூர் செய்திகள்
சில்லமரத்துப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் வனிதா கோபால், ஊராட்சி செயலர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணி கலெக்டர் முரளிதரன் ஆய்வு

Published On 2022-12-13 05:09 GMT   |   Update On 2022-12-13 05:09 GMT
  • தேனி மாவட்டத்தில் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கணக்கெடுப்பு பணியினை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
  • ஊராட்சி தலைவர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முழு ஒத்துைழப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

தேனி:

தமிழக அரசு அனைவருக்கும் வீடு என்ற இலக்கினை அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலாற்றி வருகிறது. அதன்படி ஊரகப்பகுதிகளில் வீடு இல்லாத தகுதியான குடும்பங்களை கண்டறிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கணக்கெடுப்பு பணி நடத்த உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தேனி மாவட்டத்தில் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கணக்கெடுப்பு பணியினை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் அனைவருக்கும் வீடு என்ற இலக்கினை அடைந்திட குடிசைகளில் வாழும் குடும்பங்கள் மட்டுமின்றி நிலைத்த தன்மையற்ற வாழத்தகுதியற்ற குடும்பங்களில் வாழும் குடும்பங்களையும் கணக்கெடுத்தல் அவசியமாகிறது.

பகுதி 1 கணக்கெடுப்பில் 1-க்கும் மேற்பட்ட பட்டியல்களில் இடம்பெற்றிருக்கும் குடும்பங்களை ஒரு பட்டியலில் மட்டும் நீடிக்கசெய்து மற்ற பட்டியல்களில் இருந்து நீக்கம் செய்யப்படும். பகுதி 2 கணக்கெடுப்பில் சமூகபொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு வீடு வழங்கும் திட்டம் மறு கணக்கெடுப்பு மற்றும் புதிய குடிசைகள் கணக்கெடுப்பு ஆகிய 4 பட்டியல்களில் இடம்பெறாத குடிசைகள் சேர்க்கப்படும்.

ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிப்போர், தீ விபத்துகளில் வீட்டை இழந்து தற்போது குடிசையில் வசிப்போர் மற்றும் வாடகை வீட்டில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு பணி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும், இதற்கு ஊராட்சி தலைவர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முழு ஒத்துைழப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் முரளிதரன் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News