ஓசூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
- மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
- நாலிகாபெட்டாவில் சுமார் 6 ஏக்கர் நிலத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு தலைமை மருத்துவமனை, வேளாண் விளை பொருட்கள் வணிக வளாகம், உதவி கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நாலிகாபெட்டா ஆகிய இடங்களில், மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்த அவர், நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, சித்தா மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பொது பிரிவுகளை பார்வையிட்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், குடிநீர் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீராக வைத்திருக்க வேண்டும், மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அனைத்து வகையான நோய்களுக்கும் அரசு தலைமை மருத்துவமனையிலேயே தாமான சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக நிலம் தேர்வு செய்து அரசுக்கு முன்மொழிவுக்காக அனுப்பும் பொருட்டு ஓசூர் அருகே அச்செட்டிப் பள்ளி ஊராட்சி நாலிகாபெட்டாவில் சுமார் 6 ஏக்கர் நிலத்தை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஓசூர் சந்தை அருகில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை வணிக வளாகத்தில் ரூ 3 கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்காடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் வணிகத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் அனைத்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டப் பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தவிட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பின்னர், சப்- கலெக்டர் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், ஓசூர் அரசுமருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி, தாசில்தார் கவாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, பூபதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.