உள்ளூர் செய்திகள்

கோவையில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்

Published On 2023-09-29 09:10 GMT   |   Update On 2023-09-29 09:10 GMT
  • கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
  • போராட்டம் காரணமாக அங்கு பஸ், லாரி கடைகள் எதுவும் இயங்கவில்லை.

கோவை,

காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு கன்னட அமைப்புகள், அங்குள்ள விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக அங்கு பஸ், லாரி கடைகள் எதுவும் இயங்கவில்லை. போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 30 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுபோல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு காலை நேரத்தில் 4 பஸ்களும், மாலையில் 4 பஸ்களும் இயக்கப்படுகிறது.

இந்த பஸ்கள் மூலம் கோவையில் இருந்து ஏராளமானோர் தினசரி பணி விஷயமாக சென்று வருவது வழக்கம். அதே போன்று, பெங்களூருவில் இருந்தும் படிப்பு மற்றும் பணி நிமித்தமாக கோவை க்கு வருகின்றனர்.

இன்று நடந்த போராட்டம் காரணமாக கோவையில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன.

அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு ஓசூர் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News