புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் கோவை, நீலகிரி
- ஆட்டம், பாட்டத்துடன் களைகட்ட உள்ளது
- புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஓட்டல்கள், விடுதிகள் முழுவதும் அலங்கார தோரணங்கள், வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது, பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது.
இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் வருகை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு மிகவும் உற்சாகமான நிகழ்வுகள், மறக்கமுடியாத இரவுகள் இனிப்பான செயல்பாடுகளுடன் கொண்டாடப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் 2023 புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரியில் தற்போது கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளது. புத்தாண்டை கொண்டுவதற்காகவே தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளும் இங்கு வருவார்கள். இதனால் ஊட்டியில் உள்ள விடுதிகள், லாட்ஜூகள், ஓட்டல்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது.
புத்தாண்டு தினத்தின் முந்தைய தினமான நாளை இரவு ஊட்டியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், பட்டாசு என, புத்தாண்டை அமர்க்களமாக வரவேற்க சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் தயாராகி வருகிறார்கள். புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஓட்டல்கள், விடுதிகள் முழுவதும் அலங்கார தோரணங்கள், வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரவில் ஊட்டி நகரமே வண்ண விளக்குகளாலும், அலங்காரத்தினாலும் ஜொலிக்கிறது. இதுதவிர வித, விதமான உணவு வகைகளும் சுற்றுலா பயணிகளுக்கு தயாராகி வருகிறது.
இதுதவிர ஊட்டியில் உள்ள மாரியம்மன், காந்தல் காசிவிஸ்வநாதர், எல்க்ஹில் முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், குழந்தை ஏசு, புனித மரியன்னை, சி.எஸ்.ஐ., தூய யோவான், மைக்கா மவுண்ட்உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. இதில் திரளான மக்கள் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர், கோத்திகிரியில் உள்ள பூங்காக்கள், முதுமலை புலிகள் காப்பகம் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து புத்தாண்டை கொண்டாட உள்ளனர்.
புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்கள், முக்கிய சாலைகள் என பல்வேறு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவை மாவட்டத்திலும் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். கோவையில் அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் ஏராளமான நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன.
இந்த ஓட்டல்களில் எல்லாம் புத்தாண்டையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போதே தீவிரமாக நடந்து வருகிறது.
ஓட்டல்கள் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அந்தபகுதியே வண்ணமயமாக ஜொலிக்கிறது. புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு பல்வேறு விதமான ஆட்டம், பாட்டத்துடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று பொள்ளாச்சி, ஆனைகட்டி, ஆனைமலை போன்ற இடங்களில் உள்ள ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாடத்திற்கு தயராகி வருகிறார்கள். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மக்கள் அதிகளவில் கூடி புத்தாண்டை கொண்டாடுவார்கள்.
அப்போது சாலையில் இளைஞர்கள் கார், மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து சென்றும், கேக் வெட்டியும் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதுதவிர கோவில்களில் சிறப்பு பூஜையும், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடக்கிறது.
புத்தாண்டை மக்கள் பாதுகாப்புடன் கொண்டாட போலீசாரும் அறிவுறுத்தி உள்ளனர். புத்தாண்டையொட்டி கோவை மாவட்டத்தில் மாநகரில 1500 போலீசாரும் 1500 போலீசாரும் என மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.