அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள்.
- ஒவ்வொரு நகராட்சியிலும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சிக்கு கொடுப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது.
- குப்பை மூலம் பயோகேஸ் அமைப்பு ஏற்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொடைக்கானல்:
தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிப்பகுதிகளில் தூய்மைப் பணிகளில் மக்களின் பங்கு அதிகம் தேவை என்ற நிலையில் ஒவ்வொரு நகராட்சியிலும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சிக்கு கொடுப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சரவணன், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன், நகர்மன்ற துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசுப்பள்ளி, கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியின் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தை தூய்மை படுத்தினார்கள். முன்னதாக நடந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோருக்கு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என எவ்வாறு தரம் பிரித்து நகராட்சி துப்புரவுப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பது பற்றியும் மக்கும் குப்பை மூலம் பயோகேஸ் அமைப்பு ஏற்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.