கோவில்பட்டியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்
- கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ. மகாலட்சுமி தலைமை தாங்கினார்.
- கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவில்பட்டி:
மகாபலிபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ. மகாலட்சுமி தலைமை தாங்கினார். சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை மக்களிடையே எடுத்துக்கூறும் வகையில், அன்பு மித்ரா கலைக்குழுவினர் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் தேன்ராஜா, காந்திஜி கஸ்தூரிபாய் மகளிர் மன்ற ஆலோசகர் விஜயன், தெற்கு திட்டங்குளம் மகளிர் மன்ற தலைவி ரஞ்சிதமணி, நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள் தங்கமாரியப்பன், மாரிசெல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை (லோகோ) வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியை உஷா ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவிகள் 700-க்கும் மேற்பட்டோர், 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி யின் இலச்சினை (லோகோ) மாதிரி மாணவிகள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.