உள்ளூர் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா: கிருஷ்ணகிரி, தருமபுரியில் நீர் நிலைகளில் வழிபட்ட புதுமண தம்பதிகள்

Published On 2022-08-03 15:07 IST   |   Update On 2022-08-03 15:07:00 IST
  • தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளிலும் ஆடிபெருக்கு விழா கொண்டாடினார்கள்.
  • நீர்நிலைகளில் திரண்ட பொதுமக்கள் வழிபாடுகள் நடத்தினர்

கிருஷ்ணகிரி,

பாரத போர் முடிந்து ஆடி 18-ம் நாள் கங்கை, காவரி உள்ளிட்ட பெருநதிகள் முதல் சிறிய ஆறுகளில் குளித்தால் பாவங்கள் போகும் என்பது ஐதீகம். இதனால் ஆடி பெருக்கு விழாவை தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகன்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி மாதம் முதல் அம்மன் கோயில்களில் ஆடி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு அன்று அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதோடு, நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். புதுமண தம்பதிகள் நீர் நிலைகளில் கூடி பெண்களுக்கு தாலி மாற்றி இறைவனை வழிபடுவர்.

இந்த ஆண்டு கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு 1700 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் 190 கன அடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில் 750 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

இன்று ஆடிபெருக்கு விழாவில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள், இதனையொட்டி அணைப் பகுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அணைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நுழைவாயில் பகுதியல் நிறுத்த தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருந்தது.

அதே போல் நுழைவு சீட்டு வழங்கும் பகுதியிலும் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளது. விழாவினையொட்டி அணை பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கவும், குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. மேலும் தென்பெண்ணை ஆற்று படுகை பகுதிகளிலும் ஆடிபெருக்கு விழா கொண்டாடினார்கள். கிருஷ்ணகிரி அணை செல்லியம்மன் கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகளும், அணையில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது இந்த விழாவினையொட்டி எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

தருமபுரி மாவட்டத்திலும் பென்னாகரம்,இருமத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்நிலைகளில் திரண்ட பொதுமக்கள் வழிபாடுகள் நடத்தினர். ஏராளமான புதுமண தம்பதிகள் ஒன்று கூடி பெண்களுக்கு தாலி மாற்றி வழிபட்டனர்.

Tags:    

Similar News