பெண்ணிடம் ரூ.67 லட்சத்தை பெற்று ஏமாற்றிய தொழில் அதிபர் மீது வழக்கு
- ரூ.10 லட்சம் பணத்தை மட்டும் பவுன்ராஜ், பார்வதியிடம் திருப்பி கொடுத்து உள்ளார்.
- மீதி பணத்தை திருப்பி தருமாறு அவரிடம் பார்வதி கேட்ட போது, தரு கிறேன் என்று ஏமாற்றி வந்ததாக தெரிகிறது/
தருமபுரி,
தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு பார்வதி (வயது83) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வடிவேல் கடந்த 2017-ம் ஆண்டு இறந்து விட்டார். இந்த நிலையில் பார்வதி தனது மகன் சுகுமாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வடிவேலுக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்காக இழப்பீடு தொகையாக வடிவேலுக்கு ரூ.75 லட்சம் கொடுக்கப்பட்டது. அந்த பணத்தை பார்வதி வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வடிவேலின் தங்கை மகனும், தொழில் அதிபரான பவுன்ராஜ் என்பவர் பார்வதியிடம் வந்து வங்கியில் உள்ள பணத்திற்கு தான் அதிக வட்டி தருவதாகவும், அந்த பணத்தை தன்னிடம் கொடுக்குமாறு கூறினார். அவரது ஆசைவார்த்தையை நம்பி பார்வதி, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.36 லட்சமும், தனது கணவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.31 லட்சமும் என மொத்தம் ரூ.67 லட்சத்தை எடுத்து பவுன் ராஜிடம் கொடுத்து உள்ளார்.
ஆனால், அவர் வட்டியும் தரவில்லை, அசலும் திருப்பி தரவில்லை. இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ரூ.10 லட்சம் பணத்தை மட்டும் பவுன்ராஜ், பார்வதியிடம் திருப்பி கொடுத்து உள்ளார். மீதி பணத்தை திருப்பி தருமாறு அவரிடம் பார்வதி கேட்ட போது, தருகிறேன் என்று ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பார்வதி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.