உள்ளூர் செய்திகள்

கோவை மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2025-04-27 17:22 IST   |   Update On 2025-04-27 17:22:00 IST
  • பங்களாவில் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு கருவி மூலமாகவும் சோதனை நடந்தது.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ஆனந்த்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

கோவை:

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்றிரவு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்மநபர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேயர் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இரவு 10 மணிக்கு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறையில் இந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேயர் பங்களாவிற்கு சென்றன்.

பங்களாவில் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு கருவி மூலமாகவும் சோதனை நடந்தது.

ஆனால் அங்கு வெடி பொருட்கள் எதுவும் இல்லை என்பதும், அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன்பின்னரே போலீசார் நிம்மதி அடைந்தனர்.

இதையடுத்து போலீசார், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்பதை அறிய, அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர்.

விசாரணையில், மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கவுண்டம்பாளையம் பிரபு நகர், தக்காளி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ஆனந்த்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆனந்தின் சொந்த ஊர் திருப்பூர். ஆனந்த், கோவை மாநகராட்சியில் பிளம்பராக தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி விட்டது. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆனந்தின் மனைவி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனந்த் வற்புறுத்தியும் மனைவி திரும்பி வர மறுத்து விட்டார்.

எனவே தன்னைவிட்டு பிரிந்து சென்ற மனைவி, குழந்தையை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆனந்த் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் போலீசில் புகார் அளித்தார்.

ஆனால் அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News