நஞ்சராயன்குளம்
பறவைகள் சரணாலயமாக அறிவிப்பால் நஞ்சராயன்குளத்தில் மீன்பிடிக்க தடை
- பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
- மீன் பிடிப்பதற்கான குத்தகை நீட்டிப்பை ரத்து செய்தது
திருப்பூர்,:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் 480 ஏக்கர் பரப்பில் நஞ்சராயன் குளம் உள்ளது. இக்குளத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கில் பறவைகள் வந்து செல்கின்றன. நீர்வளத்துறையின் கீழ் பவானி வடிநில கோட்டத்தின் பராமரிப்பில் இக்குளம் இருந்த நிலையில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
திருப்பூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு, குளத்தில் இருந்து மீன் பிடிக்க 5 ஆண்டு குத்தகை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஓராண்டு குத்தகை காலம் வருகிற 30ந் தேதியுடன் முடிகிறது.இக்குளத்தில் மீன் பிடிப்பதன் வாயிலாக, பறவைகளுக்கான இரை இல்லாமல் போய்விடும் என்பதால் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். மீன் பிடி தொழில் என்ற பெயரில் சிலர் பறவைகளை வேட்டையாடுவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் குளத்தில் வணிக ரீதியாக மீன் பிடிக்கும் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என திருப்பூர் வனக்கோட்ட ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர், கீழ் பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளருக்கு பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கான குத்தகை நீட்டிப்பை ரத்து செய்து திருப்பூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீன் பிடி குத்தகை உரிமம் தொடர்பாக எவ்வித விண்ணப்பமும் பரிந்துரை செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது.