பழனியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்: நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
- பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழனி:
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆன்மீக பயணமாக பழனி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கும் செல்கின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம், அடிவாரம், கிரிவீதி, படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர்.
மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் வரிசையில் காத்திருந்து முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.
ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த போதிய அளவு இடம் இல்லாததால் சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்கும் விதமாக கொடைக்கானல் செல்லும் சாலையில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.