கோவையில் இன்று கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி
- பேரணியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான உறுதிமொழி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
கோவை,
புதை படிவ எரிபொருள்களில் இருந்து உலகிற்கு ஓய்வு அளிக்கும் வகையிலும் கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வருடம் தோறும் செப்டம்பர் 21-ந் தேதி சர்வதேச பூஜ்ஜிய உமிழ்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி பல்வேறு இடங்களில் கார்பன் உள்ளிட்ட புதைப்படிவ எரிபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கார்பன் உமிழ்வை குறைப்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்தப் பேரணியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும், சுற்றுசூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
மேலும் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை வலியுறுத்தும் வகையில் மஞ்சப்பைகளையும் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான உறுதிமொழி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் எடுக்கப்பட்டது.