உள்ளூர் செய்திகள்

பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா

Published On 2022-09-25 08:57 GMT   |   Update On 2022-09-25 08:57 GMT
  • அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
  • அறிவியல் அருங்காட்சியத்தில் நடந்தது.

கோவை,

உலக பிசியோதெரபி தினத்தையொட்டி தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா கோவை மண்டல அளவிலான அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியத்தில் நடந்தது.

விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதில் சென்னையை சேர்ந்த டாக்டர்.ஜெகதீசனுக்கு அப்துல்கலாம் விருது, டாக்டர்.ரகுநாத்திற்கு இளம் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

இதேபோல் கன்னியாகுமரியை சேர்ந்த டாக்டர்.ஆல்டரின் பிக்னாவிற்கு சிறந்த பிஸியோதெரபி மருத்துவர் விருதும், பிசியோதெரபி கல்லூரி முதல்வர்களுக்கு அங்கீகார விருதுகளையும் அமைச்சர் வழங்கினார்.

இதில், சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.ராஜேஸ்கண்ணா நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் டாக்டர்.சுகன்யா தேவி, டாக்டர்.மஞ்சுளா ஆகியோர் செய்திருந்தனர்.

விழா முடிந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பதை பார்க்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பிரச்சனை செய்தவர்களையே போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மக்கள் அமைதியை விரும்புகின்றனர். பதட்ட நிலையை ஏற்படுத்த வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், துணைமேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், தளபதி முருகேசன், ரவி, டிஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்.பி.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News