பொள்ளாச்சி அருகே திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளி மீது தாக்குதல்
- மணிகண்டனை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- வெங்கடேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சோமந்துதுறையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது30). கூலித் தொழிலாளி.
இவர் திருமணமாகி தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது தம்பி வெங்கடேஷ் (23). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.
இவரும், மணிகண்டனுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் இருந்த மணிகண்டன் தனது தம்பி, ஒரு பெண்ணுடன் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தனது தம்பி வெங்கடேஷிடம் இது யார் என்று கேட்டார்.
அதற்கு அவர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். மேலும் வீட்டில் தங்க அனுமதி வேண்டும் என கேட்டார். இதற்கு மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் அங்கு இருந்த கல்லை எடுத்து தனது அண்ணன் மணிகண்டனின் தலையில் தாக்கினார். பின்னர் பெண்ணுடன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மணிகண்டனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணுடன் வீட்டிற்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை தாக்கிய வெங்கடேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.