அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்-நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தகவல்
- அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
- கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியில் உள்ள 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
அன்னூர்,
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அடுத்த மாதம் முழு பயன்பாட்டுக்கு வரும் என நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் கூறினார்.
அன்னூரை அடுத்த குன்னத்தூராம்பாளையத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் தற்போதைய நிலை மற்றும் சோதனை ஓட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் விளக்கினர்.
மேலும், இந்த திட்டம் சில மாதங்களில் முடியும் நிலையில் உள்ளதால் மேற்கொண்டு அந்த நீரை முறையாகப் பாசனத்துக்குப் பயன்படுத்தத் திட்டமிடுவது குறித்தும், கிராமங்களில் இந்த திட்டத்தின் கீழ் குளங்களில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் மின்சாதனப் பொருள்களின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பிப்ரவரி முதல் தொடர்ந்து குட்டைகள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்ப சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அடுத்த மாதம் முழுமையான பயன் பாட்டுக்கு வரும், திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கிவைக்க உள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியில் உள்ள 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அவர் கூறி னார்.கூட்டத்தில் அன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கலந்து கொண்ட னர்.