உள்ளூர் செய்திகள்

ஓசூரில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட பள்ளியில் மேலாண்மைக்குழு சார்பில் பெற்றோர்களுக்கு உண்மை விளக்க கூட்டம்

Published On 2022-10-17 15:13 IST   |   Update On 2022-10-17 15:13:00 IST
  • மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது.
  • பள்ளியின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில், இப்படி ஒரு தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது.

ஓசூர்,

ஓசூர் காமராஜ் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி தமிழ் நடுநிலைப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை விஷ வாயு பரவியதையடுத்து, அங்கு படித்து வரும் 67 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பாதிப்புக்குள்ளான ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் சிகிச்சைக்கு பின் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

இந்த பள்ளி வளாகத்திற்குள் எப்படி விஷ வாயு பரவியது? என்பது குறித்து ஓசூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழில்நுட்ப அலுவலர்கள் அடங்கிய குழுவினர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று, பள்ளி மேலாண்மைக்குழு சார்பில், மாணவர்களின் பெற்றோருக்கு உண்மை நிலையை விளக்கி கூறும் வகையில் பள்ளி வளாகத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மேலாண்மைக்குழு தலைவி சவீதா பேசுகையில்,பள்ளியில் செப்டிக் டேங்க் கசிந்து விஷவாயு பரவி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது வதந்தியாகும். பள்ளியின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில், இப்படி ஒரு தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை உண்மை காரணத்தை விரைவில் கண்டறிந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாளை முதல் (இன்று), பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வழக்கம் போல் பள்ளிக்கு அனுப்பலாம். யாரும், பயப்படத் தேவையில்லை.

இந்த பள்ளி ஆசிரியர்களும், மேலாண்மை குழுவினரும், குழந்தைகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார். மேலும், பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தார். இதில், குழுவின் துணைத்தலைவர் குமுதா, பொறுப்பாளர்கள் சிவகுமார் என்ற சுவாமி, மேகலா, மாலினி, சத்யா, சர்மிளா, சங்கீதா, ஆரிப், ராதிகா, சுதா, மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கொண்டனர்.

Tags:    

Similar News