கோவை அருகே நடந்த விபத்தில் ஜோதிடர் பலி
- மொபட் -மோட்டார்சைக்கிள் மோதலில் மேலும் 3 பேர் படுகாயம்
- தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கோவை,
துடியலூர் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர்கள் இருவரும் ஜோதிடர்கள்.
பக்கத்து ஊர்களுக்கு சென்று ஜோதிடம் பார்த்து வருவது வழக்கம். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் ஆனைகட்டிக்கு ஜோதிடம் பார்க்க சென்றனர்.
அங்கு ஜோதிடம் பார்த்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மொபட்டை மணிகண்டன் ஓட்டிச் சென்றார். சின்னத்தம்பி பின்னால் அமர்ந்து இருந்தார்.
அவர்கள் ஆனைகட்டி ரோடு மாங்கரை அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சின்னத்தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.
மணிகண்டன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த உக்கடத்தை சேர்ந்த கோகுல்ராஜ்(23). நிசாந்த் ஆகிய 3 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.