உள்ளூர் செய்திகள்

பாய்ந்து ஓடும் வெள்ளப்பெருக்கு ஆற்றில் ஒருவர் தனது குழந்ைதயை இடுப்பில் சுமந்து ஊன்று கோளை வைத்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட போது எடுத்தபடம். 

ஊரை விட்டு கடக்க பாலம் இல்லாததால் 2 மாதங்களாக வீட்டிலேயே முடங்கிய மக்கள்

Published On 2022-12-16 16:07 IST   |   Update On 2022-12-16 16:07:00 IST
  • கனமழை காரணமாகவும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள மணவாரனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன முனியப்பன் கொட்டாய் கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்ல கங்கமடுகு கிராமத்திலிருந்து குப்தா நதியின் கடந்து செல்ல வேண்டும்.

கடந்த ஒரு வருடமாக குப்தா நதியில் மழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாகவும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக ஆபத்தான நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி பயணம் செய்து வருகின்றனர். மேலும் தற்போது மீண்டும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் கிராம மக்கள் அனைவரும் கிராமத்திலேயே தவித்து வருகின்றனர்.

இதனால் கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் இரண்டு மாதங்களாக பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். மேலும் முதியவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை மருத்துவ வசதி கூட இல்லாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளதால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் ரேஷன் பொருட்கள் கூட வாங்க முடியாமல் ஆற்றை கடந்து செல்ல அச்சப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் ஆபத்தான முறையில் பாய்ந்து ஓடும் வெள்ளப்பெருக்கு ஆற்றில் ஊன்று கோளை வைத்துக் கொண்டு பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் இரண்டு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் பள்ளி குழந்தைகளை ஆசிரியர்கள் வந்து கிராம மக்களிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் வைத்தனர்.

இதையடுத்து பெற்றோர்கள் தனது குழந்தைகளை ஆற்றில் ஆபத்தான முறையில் தோளில் சுமந்து கொண்டு பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

மேலும் பல மாதங்களாக கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் தவிக்கும் இந்த கிராம மக்களுக்கு அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News