உள்ளூர் செய்திகள்

உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களைவாட்சாப் மூலம் தெரிவிக்க வசதி

Published On 2023-11-09 12:12 IST   |   Update On 2023-11-09 12:12:00 IST
உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை வாட்சாப் மூலம் தெரிவிக்க வசதி

அரியலூர்,  

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான இனிப்பு, பலகார பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ, உபயோகிக்ககூடாது, ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது.

பண்டிகை காலத்தில் மட்டும் இனிப்பு பலகாரம் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்ய வேண்டும்.

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களுக்கு விபர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருள்களின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம், காலாவதியாகும் காலம் சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் உணவு தயாரிப்பாளர்கள், உணவு பாதுகாப்பு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத்துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் .

எனவே, நுகர்வோர் உணவு பொருள்களை வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் விபரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் உணவு பொருள்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 எண்ணிற்கு வாட்சாப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News