திருப்பூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்- ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்பு
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
- இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை (டிஏ) சரண்டா், உயா்க்கல்விக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள் மற்றும் ஊா்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் ஆகியோா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், பாண்டியம்மாள், வேலுமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.