உள்ளூர் செய்திகள்

இறந்தவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்

Published On 2022-12-16 14:59 IST   |   Update On 2022-12-16 15:02:00 IST
  • இறந்தவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.
  • கழுவந்தோண்டி கிராமத்தில்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நைனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவை கொண்டது. உடையார் பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீரு வடிகால் மற்றும் காட்டு பகுதிகள் வழியாக சென்று இந்த ஏரியில் கலக்கிறது. பின்னர் இந்த ஏரி நிரம்பி வடிகால் மதகு வழியாக சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது.

இந்த ஏரியின் கரையில் இடுகாடு அமைந்துள்ளது. இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் ஏரிக்கரை வழியாக தூக்கி சென்று இடுகாட்டில் புதைக்கபடும். மழைக்காலங்களில் இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் தற்போதும் நீடிக்கிறது. எனவே இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கழுவந்தோண்டி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரது மனைவி மின்னல்கொடி (65) என்பவர் நேற்று உடல்நிலை குறைவால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் அவரது உடலை உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும் போது, எங்கள் அவலத்தை மனதில் வைத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News