உள்ளூர் செய்திகள்

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு

Published On 2023-01-18 12:24 IST   |   Update On 2023-01-18 12:24:00 IST
  • சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
  • உலக நன்மைக்காக 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்கு சங்கல்பம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது

அரியலூர்:

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பகவான் ஓரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார். அதன்படி நடப்பாண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு மகரராசியில் இருந்து கும்பராசிக்கு சனிப்பகவான் பிரவேசித்தார். இதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கோயில்களிலுள்ள சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை, மஞ்சள், திரவியப்பொடிகள், சந்தனம், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது,

அதன் பின்னர் கருப்பு வண்ண ஆடை அணிவித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து உலக நன்மைக்காக 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்கு சங்கல்பம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, எள்தீபமிட்டு சனி பகவானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு விபூதி மற்றும் எள் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

குறிப்பாக திருமானூரிலுள்ள காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர் திருக்கோயில், திருமழபாடி வைத்தியநாத திருக்கோயில், விக்கிரமங்கலம் சோழிஸ்வரர் திருக்கோயில், அரியலூர் ஆலந்துரையார், செந்துறை சிவதாண்டீஸ்வரர் கோயில் மற்றும் ஆண்டிமடம், ெஜயங்கொண்டம், பொன்பரப்பி, தா.பழூர், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதி சிவன் ஆலயங்களிலுள்ள சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.


Tags:    

Similar News