கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் இறப்பிற்கு நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம்
- கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் இறப்பிற்கு நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- அழகர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14-ந் தேதி உயிரிழந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அடுத்த கணக்கம்பாளையம் கிரமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் அழகர்(வயது32). விவசாயி. இவரது மனைவி ராஜலட்சுமி(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ராஜலட்சுமி தனது கணவர் அழகரிடம் அவரது சகோதரிடமிருந்து சொத்தை பிரித்து வாங்குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் சிறிது காலம் போகட்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களிடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜலட்சுமி ரெட்டிப்பாளையத்தில் வசிக்கும் தனது தந்தை செல்வத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து செல்வம் கடந்த மாதம் 30-ச் தேதி தனது ஆதரவாளர்கள் 8 பேருடன் சேர்ந்து சொத்தை பிரித்துவரக்கோரி அழகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அழகர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு கடந்த 14-ந் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அழகர் இறப்பு காரணமான செல்வம் உள்பட 8 பேரை கைது செய்யக் கோரி அழகர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலெக்ட் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அரியலூர் காவல் துறையினர், தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி ஆட்சியரிடம் அளிக்குமாறு கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலெக்டரிடம் அளித்துவிட்டுச் சென்றனர்.