தமிழ்நாடு செய்திகள்

பண்ணை கொள்முதல் விலை 430 காசுகளாக சரிவு- சில்லரை விற்பனை கடைகளில் முட்டை ரூ.6.50-க்கு விற்பனை

Published On 2026-03-05 10:37 IST   |   Update On 2026-03-05 10:37:00 IST
  • கோடை காலம் மற்றும் ரம்ஜான் பண்டிகை தொடங்கி உள்ள நிலையில் முட்டையின் நுகர்வு கணிசமாக குறைந்து உள்ளது.
  • பண்ணை கொள்முதல் விலை 430 காசுகளாக உள்ள நிலையில் ஒரு முட்டைக்கு 2 ரூபாய்க்கு மேல் கூடுதலாக விற்பனை செய்து வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கோடை காலம் மற்றும் ரம்ஜான் பண்டிகை தொடங்கி உள்ள நிலையில் முட்டையின் நுகர்வு கணிசமாக குறைந்து உள்ளது. இதற்கிடையே அமெரிக்கா-ஈரான் போர் தீவிரம் அடைந்துள்ளதால் அரபு நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியான 80 லட்சம் முட்டைகளும் தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் முட்டை விலை சரிந்து வருகிறது.

நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை கடந்த 13 நாட்களுக்கு முன்பு 540 காசுகளாக இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது 430 காசுகளாக குறைந்து உள்ளது. இதனால் கடந்த 13 நாட்களில் மட்டும் முட்டை விலை 110 காசுகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் சேலம், நாமக்கல் மாவட்ட சில்லரை விற்பனை கடைகளில் தற்போது வரை ஒரு முட்டை 600 காசுகள் முதல் 650 காசுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலை 430 காசுகளாக உள்ள நிலையில் ஒரு முட்டைக்கு 2 ரூபாய்க்கு மேல் கூடுதலாக விற்பனை செய்து வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

முட்டையின் பண்ணை கொள்முதல் விலை கணிசமாக குறைந்தாலும் தற்போது வரை சில்லரை கடைகளில் விலை குறையாததால் பண்ணைகளில் விலை குறைந்து என்ன பலன் இங்கு விலை குறைவதில்லை என்று குமுறி வருகிறார்கள்.

Tags:    

Similar News