உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும்- மத்திய மந்திரி பிரதிமா பெப்மிக் பேட்டி

Published On 2022-10-08 14:44 IST   |   Update On 2022-10-08 14:44:00 IST
  • மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்று மத்திய மந்திரி பிரதிமா பெப்மிக் தெரிவித்தார்
  • மதுபோதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு

அரியலூர்

அரியலூர் பெரியார் நகரில், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் நிதியுதவிடன் கருணாலயா தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் சுபம் ஒருங்கிணைந்த மதுபோதை மறுவாழ்வு மையத்தினை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பெப்மிக் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த மதுபோதை மறுவாழ்வு மையத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், நோயாளிகள் விபரம், நோயாளிகளின் எண்ணிக்கை, போதை மீட்பு சிகிச்சைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மறுவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்ததுடன், இம்மறுவாழ்வு மையத்தினை தொடர்ந்து சிறப்பாக நடத்திடவும் உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய முத்ரா உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஊட்டச்சத்து குறைபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் வளர் இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு போஷன் அபியான் என்ற திட்டத்தை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடற்றவருங்கால சமுதாயத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசு கவனமுடன் உள்ளது.

ெபண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாய முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு

செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் மாநில அரசு செயல்பட வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின் போது, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை முதன்மைச் செயலர் மிலிந்த் ராம்தேகே, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, வட்டாட்சியர் கண்ணன், கருணாலயா தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News