உள்ளூர் செய்திகள்

மனுதாரர்களுக்கு ரூ 3.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Published On 2022-11-22 13:57 IST   |   Update On 2022-11-22 13:57:00 IST
  • மனுதாரர்களுக்கு ரூ 3.50 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
  • தனியார் மருத்துவமனையில் சேவை குறைபாடு

அரியலூர்:

வெவ்வேறு வழக்குகளில் மனுதாரர்களுக்கு ரூ.3.50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னையிலுள்ள 3 தனியார் மருத்துவமனைகளுக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் திலீப்குமார் மனைவி வசுந்தரா (37). இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்து, தமது குடும்ப மருத்துவரிடம் காட்டியபோது கருமுட்டையில் நுண்ணுறைகள் வழக்கத்தைவிட பெரியதாக உள்ளது. இதனால் கேன்சர் வர வாய்ப்புகள் உள்ளது எனவும், வேறு ஸ்கேன் சென்டரில் மீண்டும் ஸ்கேன் எடுத்துவரும் படியும் கூறியுள்ளார். வேறு ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்தபோது, எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வசுந்தரா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு முதலாவது ஸ்கேன் சென்டர் தவறான அறிக்கையை வழங்கியுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், அந்த ஸ்கேன் சென்டர், ஸ்கேன் செய்வதற்கு செலுத்திய ரூ.4,400, சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதேபோல், சென்னை வடபழனியை சேர்ந்த வாசுதேவன் மகன் விபின்தேவ் (33), தலையில் வழுக்கை ஏற்பட்டதை சரிசெய்ய சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் அழகு (காஸ்மோடிக்) மருத்துவமனையில் தலையில் முடி நடும் சிகிச்சைக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.60,000 செலுத்தி சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், முன்பை விட சிகிச்சைக்கு பிறகு முடி உதிர்வு அதிகமானதோடு, தொடர் சிகிச்சைக்கு பணம் செலுத்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஒப்பந்தத்துக்கு மாறாக தனியார் அழகு மருத்துவமனை செயல்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையின் சேவை குறைபாட்டுக்காக புகார்தாரருக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதேபோல், சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த பொற்பதம் மனைவி கீதா லட்சுமி (32). சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2017 ஆம் ஆண்டு பிரசவத்துக்கு சேர்ந்தார். சிகிச்சை, அறை வாடகை, மருந்து என அனைத்து கட்டணமும் ரூ.60,000மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. அதற்கு முன்பணமாக ரூ.46,405, மருத்துவ காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ.48,000 செலுத்தப்பட்ட நிலையில், சிகிச்சை முடிவடைந்த பின்னர் கூடுதலாக செலுத்தப்பட்ட ரூ.34,405 கேட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் மீதத்தொகையை திரும்பத்தரவில்லை.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக பெற்ற ரூ.34,405, சேவை குறைபாடு மற்றும் வாடிக்கையாளருக்கு கொடுத்த சிரமங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

Tags:    

Similar News