உள்ளூர் செய்திகள்

2001-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-12-15 02:43 GMT   |   Update On 2022-12-15 02:43 GMT
  • நியூசிலாந்தில் 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்க தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
  • புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான சட்டம் நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை.

சென்னை :

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நியூசிலாந்தில் 2009-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. உலகில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடு நியூசிலாந்து தான்.

நியூசிலாந்து நாட்டின் சட்டத்தால் புகைப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு குறையும். 2050-ம் ஆண்டில் 40 வயதானவர்களால் கூட புகைக்க முடியாது. 2023-ம் ஆண்டு இறுதிக்குள் நியூசிலாந்தில் சிகரெட் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தில் இருந்து 600 ஆக குறைக்கப்படும். புகைப்பிடிப்போர் எண்ணிக்கை குறைவதால், நியூசிலாந்து மக்களின் மருத்துவத்துக்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி (5 பில்லியன் டாலர்) குறையும்.

ஒரு சட்டத்தால் இவற்றை விட பெரிய நன்மையை ஒரு நாட்டுக்கு செய்து விடமுடியாது. அதனால் தான் இது வரலாற்று சிறப்புமிக்க சட்டம். புகைப்பழக்கத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை. எனவே, இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். 2001-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News